வெள்ளி, 11 நவம்பர், 2011

இலக்கியம் கற்பித்தலில் இனிய (எளிய) வழிகள்




1. இலக்கியம் கற்பித்தலில் இனிய (எளிய) வழிகள்

முன்னுரை

இலக்கியம் என்றுமே நிலைத்து நின்று மக்களின் மனதில் இன்பம் விளைவிக்கக் கூடியவையே. இலக்கியம் வாழ்க்கையின் கண்ணாடிஎன்று சிறப்பித்து சொல்லப்படுகிறது. ஓர் இலக்கை இயம்புவதே இலக்கியம். இலக்கு + இயம் - இலக்கியம். காலத்தின் கண்ணாடி என்றும் அழைப்பதில் தவறில்லை. அத்தகைய இலக்கியத்தை நன்றாக, இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் கற்பதன் மூலம் அவர்களது எதிர்கால வாழ்வு சிறப்புடையதாக அமையும். இலக்கியத்தை எளிய நடையில் கற்பித்தால் மாணவர்கள் நன்றாக புரிந்து கொண்டு கற்பார்கள்.

இலக்கிய வகை

இலக்கியத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை

1.
சங்ககால இலக்கியம்

2.
இடைக்கால இலக்கியம்

3.
தற்கால இலக்கியம் என்பவையாகும்.

சங்ககால இலக்கியம்

உலக இலக்கியங்களில் கால வேறுபாட்டிற்கு ஏற்ப அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ற வகையில், சொல்லும் பொருளும், சில மாற்றங்களைக் கண்டு வருவது இயல்பு. சங்க இலக்கியத்தின் பொருளைக் கற்றறிந்த புலவர்களைத் தவிர மற்றவர்கள் உணர்வது அவ்வளவு எளிது அல்ல. இதனைப் பலாப்பழத்திற்கு உவமையாக கூறுவர். ஆம். பலாப்பழத்தை ஒருவர் கையிலே கொடுத்தால், அதை அப்படியே உண்ண முடியாது. முதலில் முள்ளை, தோலை நீக்க வேண்டும்; அதற்குக் கூர்மையான வெட்டுக்கத்தி வேண்டும்; பிறகு, அதன் உள்தோலில் உள்ள தசைத்துண்டுகளில் உள்ள பிசின் போன்ற பொருளை நீக்க வேண்டும். அதன் பிறகுதான், சுவையைச் சுவைத்து உண்ண முடியும். அவ்வாறு சங்க இலக்கியத்திலுள்ள ஓர் பாடலை உணர வேண்டுமெனில் அதற்கு இலக்கியப் புலமை வேண்டும். உரை ஆசிரியர்களின் துணை வேண்டும். அவ்வளவு கடினமான இலக்கியத்தை மாணவர்கள் உணரும் வகையில் எளிய வகையில் கற்பிக்க வேண்டும்.

இடைக்கால இலக்கியம்

இடைக்கால இலக்கியங்கள், சங்க இலக்கிய கடினத்தன்மையிலிருந்து, சற்றே குறைந்து ஓரளவு எளிமையுடன் காணப்படும். அதாவது முக்கனிகளில் முதல் கனியாக விளங்கக் கூடிய மாங்கனியைப் போன்றது. பலாக்கனியைப் போல, கடினமில்லாது இருக்கும். இதனை மாங்கனியுடன் ஒப்பிடுவதற்குக் காரணம், பலாப்பழத்தைப் போல் அவ்வளவு கடினமின்றி மாம்பழத்தைச் சுவைக்க முடியும்.

தற்கால இலக்கியம்

தற்கால இலக்கியங்கள், வாழைப்பழத்தை எளிமையாய் உண்ணுவதைப் போல் எளிதில் அர்த்தம் புரிந்து கொள்ள முடிகின்ற வகையில் உள்ளது. இவ்வாறு தமிழகத்தின் முதலமைச்சராய் விளங்கும் கலைஞர் கருணாநிதி அவர்கள், முக்கால இலக்கியத்திற்கும் முக்கனிகளின் மூலம் விளக்கம் தந்துள்ளார் என்பதை நாம் இங்கே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் ஓர் உலகப் பொதுமறை. அது ஒரு வாழ்வியல் சிந்தனை நூலாகும். இதனை மாணவர்கள் நன்றாக உணர்ந்து கொள்ளச் செய்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கை செம்மையடைய இதனை எளிய வகையில் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

திருக்குறளுக்குப் பல்வேறு உரையாசிரியர்கள் உரைவகுத்துள்ளனர்; அவற்றையெல்லாம் நன்றாக சீர்தூக்கி ஆராய்ந்து உள்வாங்கிக் கொண்டு, கற்பிக்க வேண்டும்.

திருக்குறளைப் பற்றியும் அதன் சிறப்பினைப் பற்றியும் ஆசிரியருக்குத் தெரிந்த வகையில், அல்லது குறிப்புகளில் உள்ளவாறு, மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

அது போலவே திருவள்ளுவரின் சிறப்பையும், அவரது திருஉருவப்படத்தையும், காட்டிக் கூறுவது நலம்.

திருக்குறள் உரைநூல் ஒன்றை அவசியம் வைத்திருக்க வேண்டும்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. - குறள்: 396 (கல்வி அதிகாரம்:40)

இக்குறட்பாவை மாணவனுக்கு உணர்த்தும் வகையை இங்கே காண்போம்.
பொருள்: மணற்கேணியைத் தோண்டத் தோண்ட நீர் ஊறிப் பெருகும், அது போல மாந்தர்கள் கற்கக் கற்க அவ்வளவிற்கு அறிவும் சிந்தனையும் பெருகும் என்பது இதன் பொருளாகும். இதனை இன்னும் எளிய வகையில் எவ்வாறு விளக்க முடியும் என்பதை இங்கே காண்போம்.

இக்குறட்பாவில் இரண்டு செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. 1. மணற்கேணி. 2. அறிவு. அறிவைக் கண்ணால் காணமுடியாது. மணற்கேணியைக் காணமுடியும். மணற்கேணியை ஆறுகள் எங்கே உள்ளனவோ அங்கேதான் காணமுடியும். சிங்கப்பூர் மாணவர்கள் பெரும்பாலும் கடலை கண்டிருப்பார்கள். ஆற்றைக் காண்பதற்கான வாய்ப்பைப் பெற்றவர்கள் குறைவாகவே இருப்பார்கள். ஆற்றில் ஊற்று தோண்டுவது கோடைக் காலங்களில் மட்டுமே இயலும். எனவே, இத்தகைய செய்தியை வரைப்படங்கள் மூலமோ அல்லது இன்றைய நவீன அறிவியல் வசதியைப் பயன்படுத்தி குறுந்தகடுகள் அல்லது இணைய தளங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி, மாணவர்களுக்குப் புரிகின்ற வகையில் ஊற்று நீரைப்பற்றிய தெளிவை உணர்த்த முடியும்.

தோண்டினால் நீர் சுரப்பது போல்
கற்றால் அறிவும் சிந்தனையும் வளரும்

என்று கூறப்பட்டுள்ளது. நீர் எல்லா இடத்திலும் சுரப்பதில்லை. மணற்பாங்கான இடத்தில் தோண்டினால் தான் சுரக்கும். அதுபோல், மாணவர்களுக்குரிய பண்பாடு, ஒழுக்க நெறிகளின்படி விளங்குகின்றவர்களுக்குத் தான் கற்க கற்க அறிவும் சிந்தனையும் வளரும்.

தண்ணீர் இல்லாத இடத்தில் எவ்வளவு தோண்டினாலும் அங்கே நீர் சுரப்பது கிடையாது. சிந்தனையாற்றலும் பண்பும் இல்லாதவர்கள் கற்றாலும் அறிவு வளருமா என்றில் வளர்வதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை. மேலும், மணற்பாங்கான பகுதியில் மென்மையும், இளகும் தன்மையும் இருப்பதனால் நான்கு புறமும் உள்ள தண்ணீர் ஓடிவந்து கிடைக்கிறது. அறிவும் அவ்வாறே புலன்களின் மென்மை தன்மையால் வளர்கின்றது.

எனவே, கற்க கற்க அறிவு வளரும் என்பது உண்மை என்ற இலக்கியச் சிந்தனையை மாணவனுக்குப் பதிக்க வேண்டும். எ.கா. பிரட் (ரொட்டித்துண்டு) அல்லதுஸ்பாஞ்ச்இதனை மேசைமீது வைத்து ஒரு குவளை தண்ணீரை ஊற்ற வேண்டும். தண்ணீர் முழுவதையும், பிரட் அல்லது ஸ்பாஞ்ச், இழுத்துக்கொள்ளும், அதே தண்ணீரைப் பிளாஸ்ட்டிக் தாளில் ஊற்றினால் தண்ணீர் இழுக்கப்படாமல் கீழே சிதறும்.

மாணவர்கள் பிளாஸ்ட்டிக் தாள் போல இன்றி ஸ்பாஞ்ச் அல்லது பிரட்டைப் போல் தண்ணீரை இழுப்பது மாதிரி அறிவை, பெற வேண்டும் என்று உணர வைப்பதன் மூலம், எளிதில் குறள் கருத்தை விளக்க முடியும்.

புறநானூற்றுப் பாடல்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துத் தமிழில் மோசிகீரனார் என்ற புறநானூற்றுப்புலவர் ஒருவர் மிகச் சிறந்த பாடல் ஒன்றை இயற்றியுள்ளார். அப்பாடல் இன்றும், எல்லா நாட்டவரும், எல்லா மதத்தவரும் ஏன் எல்லா ஆட்சியாளரும் நன்கு உணர்ந்து பார்க்க வேண்டிய பாடல் அது. இதோ பாடல்

நெல்லும் உயிர் அன்றே; நீரும்
உயிரன்றே;
மன்னன் உயிர்ந்தே மலர்தலை உலகம்;
அதனால் யான் உயிர் என்பது அறிகை
வேன்மிகு தாளை வேந்தர்க்குக் கடனே,” (புறம்: 186 / பாடியவர்: மோசிகீரனார்)

சொல் பொருள் விளக்கம்:

மலர்தலை உலகம் - பரந்து கிடக்கும் நாடு.

வேன்மிகு தானை - வேற்படை மிகுதியாக உடையசேனை

மன்பதை - மக்கள் வாழுமிடம்

விளக்க உரை

ஒரு நாட்டின் குடிமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமெனில், அங்கே நெல்லும் அதாவது சிறப்பான நெல்விளைச்சல் இல்லையென்றாலும், உயிர் வாழ்வதற்குத் தேவையான குடிநீரும் சிறப்புடன் அமையவில்லையென்றாலும் பரவாயில்லை. மன்னன் செங்கோல் பிறழாமல் சிறப்புடன் விளங்கி நல்லாட்சியை மக்களுக்கு வழங்க வேண்டும். அதுவே அந்நாட்டு மக்களுக்கு சிறப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனை மாணவர்களுக்கு எளிதில் விளங்குமாறு கூற வேண்டுமெனில் மக்களாட்சியில் மக்கள் எவ்வாறு சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்புகிறார்கள் என்பதை நடைமுறைகளைக் கொண்டு விளக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நாட்டுக்குப் பதிலாக வீட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். நாடுதான் வீடு, வீடுதான் நாடு என்று கூற வேண்டும். நாட்டுக்குத் தலைவன் மன்னன். வீட்டிற்குத் தலைவன் அதாவது வீட்டை ஆள்பவன் தந்தை. ஒரு தந்தை சரியில்லையென்றால் அந்த வீட்டில் எத்தகைய நலம் இருந்தும் அதனால் பயன் எதுவும் கிடையாது.

ஒரு தந்தை தன்மகனுக்கு மூன்று வேளையும் நன்றாக உணவு வழங்குகிறார். உடைகள் வாங்கித் தருகிறார்; எல்லாம் நன்றாக செய்கிறார்; ஆனால், தினமும் இரவில் குடித்துவிட்டு வந்து அடிக்கிறார். இப்போது சொல்லுங்கள். அந்த தந்தையின் மீது இந்த மகனுக்கு அன்பு இருக்குமா? அந்த தந்தையால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்குமா? என்பதை எண்ணிப் பாருங்கள். இதே நிலைதான் நாட்டிலும் ஏற்படும் என்பதை விளக்கினால் மேற்கண்ட புறநானூற்றுப் பாடல் மிகவும் எளிதில் மனதில் பதியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நறுந்தொகையில் காணப்படும் தனிப்பாடல் ஒன்று இவ்வாறு கூறுகிறது.

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர்க்கொள்ளாதே.

பொருள்

நூறாண்டுகள் நெருங்கித் தொடர்பு கொண்டாலும் முன்கோபங்கொள்ளும் மூடர்களுடைய நட்பானது (ஓரிடத்தில் நிலைபெறாத) நீர்ப்பாசி போலாகும். அதாவது இப்பாடல் இலக்கியத் தரமுடைய தனிப்பாடல் இதனை விளக்கும் போது ஒருவர் நட்புக்குரியவராக விளங்குவதற்கு நல்ல அன்பும் சகிப்புத்தன்மையும் வேண்டும்; அதுவன்றி எதற்கெடுத்தாலும் முன்கோபம் கொண்டவராக இருந்தால் அத்தகையவரோடு நட்புகொள்வது நன்மையும் தராது; அதுவும் எத்தனை ஆண்டுகள் நட்பு கொண்டாலும் நட்புத்தன்மை நிலைக்காது.

நீரில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தாலும் பாசியானது நிலையான வேர்ப்பிடிக்காது என்பது பொருள். இதனை இந்த அளவிலே விளக்கிச் சொன்னாலே மாணவன் விளங்கிக் கொள்வான்.

காளமேகப்புலவரின் நகைச்சுவைப் பாடல் ஒன்று.

மாணவர்கள் வகுப்பறைகளில், தமிழ் இலக்கியப் பாடல்களைக் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியான நகைச்சுவை சூழலையே விரும்புவார்கள். அத்தகைய சூழலில் கீழ்வரும் கார்மேகப்புலவரின் பாடலை விளக்கினால் மாணவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.

காரென்று பேர்படைத்தாய் கசனத்துறும் போது
நீரென்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்தபின்
வாரொன்று மென்மயில் நேர்ஆய்ச்சியர் கைவந்த பின்
மோரென்று பேர்படைத்தாய்! முப்பேரும் ஏற்றாயே!

பொருள்

மோர்க்காரியிடம் மோர் வாங்கும் போது அது தண்ணியாக இருக்கிறது. அதனை நகைச்சுவவையாக சொல்ல வந்த கார்மேகம்:

நீர், வானத்திலிருந்தால் அதற்கு கார் என்று பெயர். தரைக்கு வந்தால் நீர்என்று பெயர். தரைக்கு வந்தால் நீர்என்று பெயர். ஆய்ச்சியர் என்று சொல்லக்கூடிய இடைச்சியரின் மோர் கூடைக்கு வந்தால் அதற்கு மோர்என்று பெயர். எனவே, மோர் தண்ணீராக அதாவது கெட்டியாக இல்லாமல், தண்ணீரைக் கலந்து விற்பனை செய்வதால் அதை நகைச்சுவையாக சுட்டிக்காட்டுகிறார் காளமேகப்புலவர். இவ்வாறு காளமேகப் புலவரின் பலப்பாடல்கள், இரட்டை அர்த்தங்கள் நிறைந்த நகைச்சுவைப் பாடல்கள் உண்டு. அவற்றை மாணவர்களுக்கு எடுத்துக்கூறினால், ஆர்வமுடன் இலக்கியத்தைக் கற்ப்பார்கள்.
இலக்கியம் கற்பித்தலில் மேலும் சில எளிய வழிகள்

தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார் - குறள் 399

இலக்கித்தைப் பயிற்றுவிக்கும் போது அதன் இனிய சுவையை நாம் எவ்வாறு உணருகின்றோமோ, அதே இன்பத்தைக் கற்பவர்கள் உணருகின்ற வகையில், நாம் அதைப் பயிற்றுதல் வேண்டும்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல், இலக்கிய நுகர்ச்சியை அரியச்செய்தல் வேண்டும். சங்க இலக்கியங்கள் முழுமையான யாப்படைந்த பாடல்கள் அறம், பொருள், இன்பம், என்னும் நீதியை உள்ளடக்கியக் கவிதைகளைப் பயிற்றுவிக்கும் போது, ஒன்றி, உணர்ந்து பயிற்றுவித்தால் மாணவர்களின் உள்ளத்தில் பதியும்.

கலைபயில் தெளிவு

ஆசிரியரின் இலக்கணம் நல்லூலில் குறிப்பிடப்பட்டது போல, கலைபயில் தெளிவு, ஆசிரியருக்கு இருத்தல் வேண்டும். இலக்கியத்தை நடத்துகின்றபோது அதனோடு தொடர்புடைய செய்திகளை பல்வேறு இலக்கியங்களிலிருந்தும் எடுத்துக்காட்டிக் கூறுதல் நலம் பயக்கும்.

சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம், தற்கால இலக்கியம், இவற்றிற்கிடையே காணப்படும் சொல் மாறுபாடுகளையும், சொல்பரிணாமங்கள் மற்றும் திரிபு (மாறுபாடு) ஆகியவற்றை நன்றாக விளக்கிக் கூறுதல் வேண்டும்.

இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடியாக விளங்கி சமூகத்தின் பல்வேறு கலாச்சாரங்களைப் பதிவு செய்து இளைய தலைமுறைக்கு வழங்கி வருகிறது. எனவே, இதனை பொழுது போக்கிற்காக மட்டும் நாம் கற்காமல் வாழ்வியலுக்காகவும் கற்கவேண்டும் என்ற உறுதியுடன் கற்கவும், கற்பிக்கவும் வேண்டும்.

முடிவுரை

இன்றைய தினம் பெருகியுள்ள நவீன அறிவியல் வளர்ச்சியின் பல்வேறு சாதனங்களைக் கொண்டு, இலக்கியத்தை எளிய நடையில் கற்பித்து புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக