புதன், 27 நவம்பர், 2013

பெண்-கட்டுரை-திறனாய்வுப்பகுதி



                                  பெண்
பெண் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. கடந்த சில தசாப்தங்களில் பெண் மீதான அடக்குமுறைகள், அவள் மீதான உடல், உள ரீதியான வன்முறைகளாக மாற்றம் பெற்றுள்ளன.



அதிலும் பெண் குடும்பத்தில் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே, தெரிந்தவர்களாலேயே அதிகளவில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள். குடும்ப வன்முறைகள் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன. அடித்தல், உதைத்தல் என்பனவற்றிலிருந்து, உள ரீதியான பாதிப்புகள் வரை குடும்ப வன்முறைகள் வேறுபடுகின்றன. உலகம் பூராகவும் நிலவும் நிலை



* மூன்று பெண்களில் ஒருவர் தான் நன்கு அறிந்தவர்களாலேயே அல்லது தனக்கு மிக நெருக்கமானவர்களாலேயே அடித்துத் துன்புறுத்தப்பட்டோ, கென்யாவில், ஒவ்வொரு கிழமையும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் தமது துணைவர்களால் கொல்லப்படுகிறார்கள்.



* எகிப்தில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானோர் திருமண வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் கணவனால் அடித்துத் துன்புறத்தப்படுகின்றனர்.



* கனடாவில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பாராமரிப்புக்கென வருடாந்தம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப் படுகின்றது.



* அமெரிக்காவில் ஒவ்வொரு 12 செக்கன்களுக்கும் ஒரு பெண் தனது கணவனாலோ, துணைவனாலோ அடித்துத் துன்புறுத்தப்படுகின்றாள்.



* பாகிஸ்தானில் 42 சதவீதமான பெண்கள் குடும்பத்தில் தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைத் தமது தலைவிதி என ஏற்றுக்கொள்கின்றனர்.



* ரஷ்யாவில் தினமும் சுமார் 36,000 பெண்கள் தமது கணவரால் வன்முறைக்கு உள்ளாகின்றனர்.



* ஸ்பெயினில் 2000ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், 5 நாட்களுக்கு 1 தடவை ஒரு பெண் தனது கணவனால் கொல்லப்படுகின்றாள்.



* இந்தியாவில் சுமார் 15,000 பெண்கள், வருடாந்தம் சீதனக் கொடுமையினால் கொல்லப்படுகின்றனர்.



2003 இல் பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்த்து 54 நாடுகள் சட்டமியற்றின.



* 79 நாடுகள் வீட்டு வன்முறைகளை எதிர்த்து எந்தவிதமான சட்டங்களையும் கொண்டிருக்கவில்லை.



* திருமண பந்தத்திலும் பெண்ணின் விருப்பின்றி உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என 51 நாடுகள் அங்கீகரித்தன. விஷேடமாக பாலியல் பலாத்காரம் தொடர்பில், 16 நாடுகளே சட்டங்களைக் கொண்டிருக்கின்றன.

இலக்கியத்தை விற்பனைப் பொருளாக்க பெண் பற்றிய வர்ணனைகள் உத்திகளாயின! இந்த மிலேனியம் ஆண்டு வரை பெண் தன் அழகு இரகசியங்களில் பெருமைப்பட்டுக் கொள்வதிலும் கற்புத் தன்மையை நிரூபிப்பதிலுமே ஆர்வமுடையவளாக இருக்கிறாள். அல்லது தன் ஆளுமை திறமை என்பவற்றை வளர்ப்பதில் காட்டும் ஆர்வத்திலும் பார்க்க அதிக ஈடுபாட்டை மேற் குறித்த விடயங்களில் காட்டுகிறாள்.
 
காமசாத்திரம் காமசூத்திரம் மதனசிந்தாமணி என்பவற்றைப் புறநிலையில் நின்று வாசிக்கும் போது இந்த ஆணாதிக்க நிலைப்பாடு தெட்டத்தெளிவாகும். அதிலும் வாசகர்களை முழுதாக ஆண்களாகக் கருதிக்கொண்டு படைக்கப்படும் இலக்கியங்களில் பெண் தாய் சகோதரி என்ற உறவு நிலைகளைக் கடந்து ஆணைத் தூண்டற் பேறடையச் செய்யும் ஒரு கூறாகவே காட்டப்படுகிறாள். இந்தக் காட்சி நிலையிலிருந்து மீள முடியாத அளவுக்கு சமூக இறுக்கத்தைத் தக்க வைத்தது தவிர வேறு எதனையும் இத்தகைய பண்பாடுகளால் அடைய முடிவதில்லை.
இந்த 21ம் நூற்றாண்டிலும், தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றும், பெண் சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் என்றும், பெண்ணியம் பேசுவது தற்போதைய நாகரீகம் என்றும் பிதற்றும் ஆண் சமூகத்துக்கு, அந்த ஆண்சமூகம் தம்மைத்தான் மிதிக்கிறது என்று தெரியாமல், புரியாமல் குடை பிடித்துப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில பெண்கள்.

இவர்களின் இந்த அறியாமை நிறைந்த செயற்பாடுகளினால் பெண்விடுதலை என்பது இன்னும் எட்டாத உயரத்திலேயேதான் இருக்கிறது.
தமது பிரச்சனைகளை மற்றவர்களுடன் பேசும் துணிவும் தைரியமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வரவேண்டும். தமது பிரச்சனைகளை மட்டுமின்றி தம்மைச் சுற்றியுள்ள மற்றைய பெண்களின் பிரச்சனைகளையும் கூடத் தயக்கமின்றி வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு இவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

நாம் என்ன செய்கிறோம்? என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும் என்பதையும், உண்மை , நேர்மை, கடமை, கண்ணியம், சரியெனப் பட்டதைச் செய்யும் துணிவு, நினைத்ததை செயற்படுத்தும் தைரியம், அறிவார்ந்த செயற்பாடு... இப்படியான விடயங்கள்தான் எமது வாழ்வுக்குத் தேவை என்பதையும், யாருக்கும் பயந்து வாழ்ந்தோமேயானால் எமக்கான வாழ்வு இல்லாமல் போய்விடும், என்பதையும் மன உளைச்சலினால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு உணர்த்த வேண்டும். தன்னம்பிக்கையை முடிந்தவரை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.
பெண்குழந்தையின் திறமைகள் இப்படியான செயற்பாடுகளால் கட்டிப் போடப்படுகின்றன. அந்த நிலையில், தன் திறமையை வெளிப்படுத்த முடியாத கோபத்தில், அது பற்றிப் பேசக் கூட முடியாத விரக்தியில் அந்தக் குழந்தை உளவியல் நோயாளியாகிறது.
பெற்றோர்கள் தங்கள் நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்காகச் செலவு செய்யும் நேரத்தை விடக் கூடிய நேரத்தை தமது பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பதற்குச் செலவு செய்ய வேண்டும். அது பிள்ளைகளின் மனதில் ஒரு சந்தோஷத்தையும், பெற்றோரிடம் எதையும் மனம் திறந்து பேசி, ஆலோசனை கேட்கும் தன்மையையும் ஏற்படுத்தும்.
அவள் பெற்றோரோ, அல்லது அவள் கணவனோ அவளை அவள் எண்ணத்துக்கு ஏற்ப இயங்க விடுகின்றனரா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். அதுதான் கூடுதலான சந்தர்ப்பங்களில் ஒரு பெண்ணின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.

திருமணமானபின், என்னதான் ஒரு பெண்ணிடம் திறமையும் முன்னேற்றப் பாதையை நோக்கிய நல்ல சிந்தனையும் இருந்தாலும், கணவன் என்பவன் அங்கு தடைக்கல்லாக, அவள் எண்ணங்களுக்கு முட்டுக் கட்டையாக நின்று "பெண்ணுக்கு சமையலும் சாப்பாடும் பணிவிடையும்தான் முக்கியம்" என்று சொல்வானேயானால், அந்தப் பெண்ணின் எதிர்காலம் புலம் பெயர் மண்ணிலும் புதுமைகள் எதையும் காணாது சமையலறை நெருப்பில் தீய்ந்து, படுக்கையறை விரிப்பில் மாய்ந்து போகும்.
பெண்களுக்குள்ளும் ஆண்களைப் போலவே ஆசை, பாசம், கோபம், நேசம்.. போன்ற எல்லா உணர்வுகளும் இருக்கின்றதென்பதை ஆண்களுக்குப் புரிய வைத்து, பெண்கள் அடிமைத் தனத்தையோ, அடக்கு முறையையோ விரும்பவில்லை, தாம் தாமாகவே வாழ விரும்புகிறார்கள் என்பதை உணர வைத்து, குடும்பத்தைக் குலைய விடாது காக்க வேண்டிய பாரிய பொறுப்பும் விடுதலைப் பாதையை நோக்கி நடக்கின்ற இன்றைய பெண்களுக்கு உள்ளது.
வேலைக்குப் போகும் பெண்கள் நிறையவே கஸ்டப் படுகிறார்கள். காரணம் ஆண்கள் சமூகம் இன்னும் பெண்களின் விடுதலைப் பாதையை நோக்கிய இந்த பயணத்தைச் சரியான முறையில் ஏற்றுக் கொள்ளவில்லை.

பெண்கள் வேலைக்குப் போகத் தொடங்கியதால் ஆண்களின் வாழ்க்கை சற்றுச் சுலபமாகியுள்ளது. அவர்கள் தனியாகச் சுமந்த குடும்பத்தின் பணத்தேவையை, இப்போது வேலைக்குப் போகும் பெண்களும் பங்கு போட்டுச் சுமக்கிறார்கள்.
வேலைக்குப் போகும் பெண் நிறையவே கஸ்டப் படுகிறாள். சில சமயங்களில் நேரமின்மை காரணமாக பிள்ளைகளைச் சரிவரக் கவனிக்க முடியாமல் கூடத் திண்டாடுகிறாள். கவலைப் படுகிறாள்.

இந்த நிலையில் கூட பிள்ளை ஒரு தவறு செய்யும் போது, "நீ பிள்ளையைச் சரியாக் கவனிக்கிறேல்லை." என்று கணவனிடம் திட்டும் வாங்குகிறாள். ஒரு கணவனும் தந்தையாக நின்று, பிள்ளையைக் கவனிக்கலாம்தானே. அப்படி நடப்பது மிகமிகக் குறைவு. ஏனெனில் இதெல்லாம் பெண்களின் வேலையாகவே கருதப்படுகின்றன. அது இன்று பெண் வெளியில் வேலைக்குப் போகும் போதும் மாறி விடவில்லை.
பண்பாட்டின் படி "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற வரையறையான கோட்பாடு, மிகவும் போற்றப்பட வேண்டிய ஒன்றுதான். தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக கிளர்ந்தெழ வேண்டியவர்கள் பெண்களே!
சமூகத்தில் பெண்கள் மிகவும் வேகமாக முன்னேற வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனென்றால் பாதிப்புகளும் பிரச்சினைகளும் மூடக் கொள்கைகளும் முரண்பாடுகளும் பெண்களிடமே அதிகம் காணப்படுகின்றன. இவை நிச்சயமாக முன்னேற்றத்திற்கு தடையாகவே அமையும். இந்தத் தடைகளை உடைத்து அல்லது தகர்த்து முன்னேற வேண்டிய பெரும் பொறுப்பு பெண்களுக்குரியது. அப்பொழுதுதான் பெண்கள் இலகுவில் முன்னேற முடியும்.
பெண் என்பவள் இரண்டாம்படி நிலையில் இருப்பதுதான் அவளின் பெண்மைக்கு புனிதம் கற்பிப்பது என்ற மாதிரியான கருத்தும் இருந்து வருகின்றது. பல இடங்களில் |பெண்தானே| என்கின்ற அலட்சியம் அல்லது அக்கறையின்மையையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இப்படியான பார்வைகளையும், படிநிலைகளையும் தாண்டி முன்னேற வேண்டிய நிலையிலேயே இன்றைய சாதாரண பெண் இருக்கின்றாள் சமூகம் திருமணம் என்பது பெண்ணின், ஆணின் வாழ்வில் நடைபெற வேண்டிய ஒரு முக்கிய நிகழ்வாக கருதுகிறது. ஓரு பெண் திருமணம் என்ற சடங்குக்குப் பின்னாலே தாய்மையை அடைய வேண்டும் என்ற உறுதிப் பாடும் அத்திருமணம் பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கும் என்ற கருத்தில் தெளிவாக நிற்பதை நாம் அறிவோம். அவ்வாறு உறுதியான நிலைப்பாட்டில் வாழும் சமூகத்தின் மத்தியில் திருமணமாகாத பெண்கள் எப்படி வாழ முடியும் என்று நாம் நோக்கினால் இச்சமூக அங்கத்தவர்களால் அவர்கள்மேல் ஒரு அனுதாப அலையை வீசுவதுடன் ஓரளவு தனிமைப் படுத்தலும் நிகழ்த்தப்படுகின்றது.
பெண்கள் தமது சமூகத்திற்குப் பொருத்தமான மேம்பாடான கல்வியை வடிவமைப்பதற்கும் பெறுவதற்கும், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் சொத்துரிமை, தமக்கு தேவையான விரும்பமான தொழிற்துறையைத் தெரிவு செய்வதற்கும் பெண்களே சுயமாகச் சிந்திக்கவும் முடிவெடுக்கவும் வேண்டும். ஆண் பெண் இருபாலாரும் சமநிலைக்கு வர, இன்றைய இளம் பெண்கள்தான் சரியாகச் செயற்பட வேண்டும். நீங்கள் படிக்க வேண்டும். உங்கள் காலில் நீங்கள் நிற்பதற்கு, சொந்தமாகத் தொழில் பார்க்க வேண்டும். போலிச் சம்பிரதாயங்களையும், ஆடம்பரத்திலான அதிக ஈடுபாட்டையும் தவிர்த்து, எது தேவை என்பதை உணர்ந்து வாழவேண்டும்.
ஆண்கள் வேலை செய்பவர்களாகவும், பெண்கள் வெறுமனே சமைப்பதும், படுக்கையப்பகிர்வதும்தான் என்ற ரீதியில் தொடர்ந்து சித்திரிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த நிலைப்பாடு இன்று மாறத் தொடங்கியுள்ளது. கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. இன்று பெண்கள் விமானம் ஓட்டுகின்றனர். விண்வெளிக்குச் செல்லுகின்றனர். களத்தில் ஆண்களுக்குச் சரிக்குச் சமனாக நின்று எதிரியை எதிர்த்துச் சமராடுகின்றனர். பெரிய தொழில் நிறுவனங்களை நிர்வகிக்கின்றனர். கல்லூரி முதல்வர்களாகவும், வைத்திய நிபுணர்களாகவும், கட்டிட பொறியிலாளர்களாகவும் திகழ்கின்றனர். மேலும் வயலில் ஆண்களுடன் சேர்ந்து வேலையைப் பங்கு போட்டுச் செய்கின்றனர்.
ஹெலன் பிஸர் ( Hellen Fisher ) என்ற பிரசித்தி பெற்ற அமெரிக்க மனித வர்க்கவியல் நிபுணர் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியாகப் பெண் 21ம் நூற்றாண்டின் தலைவியாக வருவாளென்று எதிர்வு கூறுகின்றார். மேலும் அவர் தனது ஆய்வு நூலில் உளவியல் ரீதியாக ஆண்களிலும் பார்க்கப் பெண்கள் பல மடங்கு பலம் வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் தலைமைப்பதவியை வகிக்கத் தகுதிபெற்றவர்கள் என்றும் கூறுகின்றார். பெண்களின் தலை சிறிதாக இருப்பதனால் மூளையும் ஒப்பீட்டளவில் ஆண்களின் மூளையைவிட சிறிதாக உள்ளது. ஆனால் மூளையினுள் காணப்படுகின்ற நியூரோன்கள் எனப்படும் நரம்புக்கலங்களின் எண்ணிக்கை பெண்களில் கூடுதலாக உள்ளது. மேலும் ஆண்களின் குருதியில் ஈமோகுளோபினின் அளவு கூடுதலாகவும் பெண்களின் குருதியில் இமினோகுளோபினின் அளவு கூடுதலாகவும் உள்ளது. இதனைப் பெண்கள் வீட்டிலும் வெளியிலும் தங்களின் பணியை எதுவித ஓசையுமின்றி செய்து முடிப்பதினை வைத்தே கண்டு கொள்ளலாம்.
குழந்தைப்பருவத்தில் ஆணும் பெண்ணும், சரிசமமாக வளர்கின்றனர், வளர்க்கப்படுகின்றனர். ஆனால் பெண்கள் பூப்பெய்துகின்றபோது உடல், உள ரீதியாக பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை வருவதனால் சமூகம் அவளின் செய்ற்பாடுகளை சுதந்திரத்தினை மட்டுப்படுத்துகின்றது.
பெண்ணை விழிப்புறச் செய்வது யார்? அவள் விழிப்படையத் தடையாக நிற்பது எது? உண்மையில் பெண்ணையும், அவளது பிறவிக் குணமான தாய்மை உணர்வையும் தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியாது. பெண்ணைப் பெண்ணே விழிப்புறச் செய்யவேண்டும். அதற்குத் தடையாக நிற்பது அவளுடைய மனமாகும்.
வாழ்வின் அஸ்திவாரம் எது? பெண்ணைப் பெண்ணாக்குவது எது? அவளுடைய அடிப்படைக் குணங்களான தாய்மை, அன்பு, கருணை, பொறுமை போன்றவையாகும். பெண்ணின் அடிப்படை தத்துவம் தாய்மையாகும்.

தாய் ஆவதும், மனைவி ஆவதும், கணவனுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் நண்பனாவதும் அவளுக்கு எளிதான செயலாகும். இல்லற வாழ்வையும், உத்யோக வாழ்வையும் ஒன்றாகச் சேர்த்து குழப்பிக் கொள்ளாமல் இருக்க அவளால் முடியும். அலுவலகத்தையும், பதவியையும் வீட்டிற்குக் கொண்டு வருவதும், அதன் விளைவான உணர்ச்சிகளை மனைவியிடமும், குழந்தைகளிடமும் வெளிப்படுத்துவதும் பெரும்பாலான ஆண்களின் இயல்பாகும்.
சமூகத்தின் சட்ட திட்டங்களும், மத ஆசாரங்களும் அவை தோன்றிய காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்பவே உருவாயின. பெண்ணின் வளர்ச்சிக்காக அன்று உருவாக்கப்பட்ட அந்த சட்ட திட்டங்கள் இன்று காலாவதி ஆகிவிட்டன. அதுமட்டுமல்லாமல், அவை பெண்ணின் இன்றைய வளர்ச்சிக்குத் தடையாகவும் இருக்கின்றன.


ஆண், அவனுக்காகப் படைத்த ஒரு உலகத்தில்தான் இன்று பெண் வாழ்ந்து வருகிறாள். அந்த உலகத்திலிருந்து வெளியில் வந்து, அவள் தனக்குரிய தனித்தன்மையை நிறுவ வேண்டும். அதேசமயம், பெண் விடுதலை என்பது, அவள் மனம்போன போக்கில் வாழ்வதற்கும், நடந்துகொள்வதற்கும் உரிய சுதந்திரமல்ல. பெண்ணின் உயர்வு அவளது மனதிற்குள்ளிருந்தே ஆரம்பமாக வேண்டும்.(net content) உடையில் மாற்றம் காண்பதல்ல சுதந்திரம். தமது எண்ணங்களை வெளிப்படுத்தி, வாழ்ந்து காட்டுவதில்தான் உண்மையான பெண்கள்தினம் கொண்டாடுவதில பயனுண்டு.

பத்தியைப் படித்துணர்ந்து கீழ்வரும் வினாக்களுக்கு விடையளி்.

1. பெண் குறித்த உனது கருத்துகளை எழுதுக.
2. உலகளாவிய அளவில் பெண்ணின்நிலை பாலியல் சூழலில் தடுமாறி நிற்பதால் பெண்கல்வி பாதிப்படைகிறது. இக்கூற்று உண்மையானதா? ஆராய்க.
3. பெண்ணின் இரண்டாம் இடத்திற்கு ஆணின் சர்வாதிக்கப்போக்கும்,
ஒரு காரணம் குறித்தும் விளக்கம் தருக. 
4. பெண்ணின் பதின்மக்கல்விநிலையில் சிக்கல்கள் வரும் நிலைகளை ஆராய்க. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக