வியாழன், 11 டிசம்பர், 2014

பெண்களும்,இணையத்தளமும்

 பெண்களும், இணையத்தளமும்

முனைவர் இலட்சுமி
தமிழ்த்துறை வல்லுநர்

    இன்றைய உலகைப் பொறுத்த அளவில் பெண் ஒரு பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டவளாகவே நோக்கப்படுகிறாள். காரணம் பெண் குறித்தான தவறான கண்ணோட்டங்கள் அவளது முன்னேற்றத்தைத் தடை செய்கின்றன. இதற்குப் பெண் உலகளாவிய அளவில்ஒரே மாதிரியான சிந்தனையுடன் இயங்கவேண்டும். பாலியல் வன்முறைகள் பெருகி வருவதால் பெண்கள்  அணியும் உடைகளைப் பிறர் கவரத்தக்கமுறையில் ஆபாசமாக அணிதல் கூடாது. உடை சுதந்திரம் என்று பெண் பேச முற்படும்போது அவள் பேசும்,செய்யும் காரியங்கள் அனைத்தும் இக்காரணத்தினால் பயனற்றுப்போய்விடுகின்றன. உடை சவுகர்யம் என்பது இன்றைய காலகட்ட உலகில் ஆண் சமூகம் இன்னமும் மாற வேண்டியிருப்பதால் இயலாத ஒன்றுதான்.இதனால் இணையத்தளத்திலும் பெண்கள் வரத் தயங்குகின்றனர். இத்தகைய நிலை மாறுபட பெண்கள், புகைப்படங்கள்,குடும்பச் செய்திகள் இவற்றை வெளியிடுதலைத் தவிர்க்கவேண்டும். நெருப்பு என்பதற்காக நாம் அதனைப் பயன்படுத்தாமல் இருக்கிறோமா? அதைப்போலத்தான் இணையமும் . இணையவழி கற்றல்திறன் மேம்பட பலமென்பொருட்கள்,அறிவார்ந்த செய்திகள் மிகுந்துள்ளன. வெறும் பொழுதுபோக்குசாதனங்களல்ல இணையம் என்பதை உணர்ந்து பெண்கள் பணியாற்றவேண்டும்.

இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட  பின்வரும்  பரிசு பெற்ற கவிதையினை நோக்கும்போது பெண்கள் எந்தஅளவு சிந்திக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இத்தகைய நிலை வளரவேண்டும்.அதற்குப் பெண்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.இச்சமூகம் பலதரப்பட்ட கருத்துகளைக் கொண்டு இயங்குகிறது. இவ்வுலகில் பெண் குறித்த சிந்தனைகளும் மாறுபட்டு இருப்பதனால் ஏற்படும் அவலநிலை மாறுபடவேண்டும். பெண்கல்வி வலுப்பெற இணையவழிக்கல்வி இன்றியமையாதது.

                 தாய் தந்தை அன்பு

            நன்றி-     எழுத்து.காம்


நேற்றுவரை உயிர்ப்பும்
ஊர்மெச்சும் வனப்பும்
குறையாத சிறப்பும்
கொண்டதொரு ஜோடி மரங்கள்

சீமந்த அழகு கொண்டு
சிங்கார புன்னகை வீசி
சீமாட்டியாய் சில பூக்களையும்
சீமானாய் சில விதைகளையும்
பெற்றெடுத்தது பெண்மரம்

சித்திரையில் நிழலும்
செருக்கில்லா சிறப்பும்
செருப்பில்லா பாதத்தோடு
செம்மண்காட்டு நீர்உறிஞ்சி
சேயிற்கு சேமிக்கும்
வேராய் நின்றதந்த ஆண்மரம்.

மொட்டுக்கள் விரியும் வரை
மௌனம் காத்தன
விதைகள் விடியும் வரை
விளையாடி சிரித்தன
பிள்ளைகளின் பெருங்களிப்பில்
பெருமை கொண்டன ஜோடி மரங்கள்

வசந்த காலத்தின் வளமையால்
வாரிசுகள் வளைந்து கொடுத்தன
வயதில் மூத்தோர் என
வணங்கி வரம் பெற்றன

இலையுதிர் காலம் கண்டு
இனி பயனில்லை என்று
ச(சொ)த்துக்களை சுருட்டிக் கொண்டு
சொல்லாமல் சென்றன.

உடலின் சுருக்கம் வயதை காட்ட
உயிரின் இறுக்கம் நோயை கூட்ட
உழைக்க உறுதியின்றி
உறவுகள் ஏதுமின்றி
ஊனுடம்பு நொந்தன இருமரங்கள்

இருமரங்களின் இறுதிக்கிளையில்
இளைப்பாற ஒரு பறவை வர
இதுதான் இறுதி நாளென
இரு இதயங்கள்
இரங்கல் செய்தி சொல்லிவிட
இருப்பிடம் தந்த மரத்தின்
இறுதி சடங்கில்
இறகுளர்த்திய பறவைகள்
இழப்புணர்ந்து அழ
இரு மரங்களின்
இறுதி மூச்சாய்
ஒற்றை சருகு ஓயாமல் ஆடியது
அது,
பெற்ற பிள்ளையை காண ஏங்கியது...


V.Seethaladevi
BCA 3rd year Swami Dayananda Arts&Science College
Manjakkudi Kodavasal(tk) Thiruvarur(dt)