செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

இணையத்தில் தமிழ் நாளேடுகள்-ஓர் ஆய்வு



                                       இணையத்தில் தமிழ் நாளேடுகள்-ஓர் ஆய்வு
                                                                                   முனைவர் பி.ஆர்.இலட்சுமி.,
                        பி..லிட்.,எம்.ஏ(தமிழ்),(மொழியியல்).,எம்ஃபில்.,புலவர்.,பிஎச்.டி., டிசிஇ.,(பிஜிடிசிஏ).,(எம்.ஏ.,டிசிஏ) 
                                                                                                                    தமிழ்த்துறை வல்லுநர்,
                                                                   சென்னை-66.
                 நாடு விட்டு நாடு இடம்பெயர்ந்து குறிப்பிட்ட கொள்கைக்கென மனித சமூகம் வாழ்ந்து வருதல் பண்டைக்கால மரபு. அவ்வாறு வாழ்ந்து வரும் காலகட்டங்களில் இடத்திற்கேற்றவாறு தன்னைப் பண்படுத்தி வாழ்வது  மனிதனின் பண்பாட்டுநெறி. அறிவியல் இயந்திர உலகில் அனைத்தும் கணினியின்வழி இயங்கிவருதலின்போது சமூதாயத்தில் பண்பாட்டின் வெளிப்பாடான நாளேடுகளின் பங்கு இன்றியமையாதது. அத்தகைய நோக்கில் இணையத்தில்  வெளியாகும் மின் நாளேடுகள் குறித்து ஆய்வது இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகிறது.
இணைய நாளேடுகளின் வளர்ச்சியும், பயன்களும்
             மனிதன் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் குறித்து அறிவதில் அதிக ஆர்வம் காட்டிவாழ்வது உலக இயல்பு. மக்கள் இன்றைய வாழ்க்கைமுறையில் இணையத்தைச் செல்லிடப்பேசி, கணினி எனப் பலமுறைகளிலும்  பயன்படுத்துகின்றனர். இவ்வுலகில் ஊர்திகள் சென்று சேர இயலாத இடத்திலும் செய்திகள் இதன்வழியாக மக்களைச் சென்றடைகின்றன. இதனால் மக்களின் தொழில்நுட்பச் சிந்தனைக் கருத்துகள் தெளிவடைகின்றன. நாளேடு வடிவத்தில் இணையத்தில்  படிக்கப் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மக்களின் தேவை அறிந்து அவை இயங்கி வருகின்றன. காலந்தோறும் மக்களின் தொழில்நுட்பச் சிந்தனைக் கருத்துகள் வளர்ச்சியடைந்துள்ளமையால்  1974ஆம் ஆண்டிலிருந்து மின் நாளிதழ்களுக்கான முன் மாதிரி நுட்பங்கள் வளர்ந்தன. இலினாய்சு பல்கலைக்கழகத்தில் பிளேட்டோ முறைமையைப் பயன்படுத்தி இணையத்தில் மட்டும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நாளிதழ்கள் தயாரிக்கப்பட்டன.(விக்கிஃபீடியா)
 படைப்புகளின் பக்கங்களைப் பிரதி எடுக்கவேண்டிய வசதிக்கட்டமைப்புகளுடனும், உடனடி விவாதக் கருத்துகளுடன்கூடிய வசதிநிலைகளுடனும் யுனிகோட் தொழில்நுட்பத்திற்கேற்றாற்போல இணைய நாளேடுகளான தினமலர், தினமணி, தினத்தந்தி, தினகரன், தி இந்து, தமிழ்முரசு போன்றவை இந்தியாவில் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன.
மாணவர்கள்  அடையும் நன்மைகள்
           புத்தக வாசிப்பு (www.badhriseshadhri.nin) குறித்து மாணவர்களிடையே பத்ரி பேசியமை குறித்த செய்தியின்வழி இன்றைய மாணவர்கள் எதனையும் பார்த்து அறிவதில்தான் நாட்டம் அதிகம் உடையவராக இருப்பது தெரியவருகிறது. நாளேடு படிக்கும் பழக்கம் மாணவர்களிடையே குறைந்து வருகின்ற காரணத்தினால் பெரும்பான்மையான தமிழகப் பள்ளிகள் நாளேடுகளில் வெளியாகும் செய்திகளைப் படிக்கும் முறையினை ஊக்குவிக்கின்றன. நாளேடு செயல்வரைபடத்திட்டத்தின்வழி கற்றல்திறனை மாணவர்களிடத்தில் வளர்க்கிறது. இது இணையவழி நாளேடுகளைப் படிப்பதினால் ஏற்படுவதில்லை. இருப்பினும்,  தரவுகளைச் சேகரித்துக் கற்றல்திறனை மேம்படுத்த இணைய நாளேடுகள்  உதவி புரிகின்றன. படிக்க இயலா நேரங்களில் நமக்குத் தேவைப்படும் நாட்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் வசதியினையும் நாளேடுகள் அளிக்கின்றன.  சினிமா, புத்தகம், இசை சார்ந்த ரசனைகள், பாதித்த நிகழ்வுகள், ஆன்மீகம். சமையல், வேடிக்கை, கிசுகிசு, அரசியல், அன்றாட நிகழ்வுகள் எனப் பலதரப்பட்ட செய்திகளை நாளேடுகள் அளிக்கின்றன. நாளேட்டின் வலைத்தள வடிவமைப்பு வண்ணத்திற்குப் பெரும்பான்மையான நாளேடுகள் இன்னமும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.

                 நடுத்தரவருமானம் நிறைந்தவர் வீட்டில் ஒரு நாளேடு மட்டுமே வாங்க இயலும். அவர்களால் நினைத்த கோயில்களுக்குக்கூடச் செல்ல இயல்வதில்லை. நூலகத்திற்குச் சென்று படிக்கும் வாய்ப்புகளும் மிகவும் குறைவு. இத்தகைய சூழலில் வாழ்ந்து வரும் சமுதாயமக்களின் நலனுக்கேற்றாற்போலத் தினமலர் நாளேடு  அழகாக எல்லா மதத்தினவருக்கான ஒளிக்காட்சிகளை வடிவமைத்துள்ளது.  தினமலர் நாளேட்டினைப் படிக்கப் பதிவு செய்தால்  மின்னஞ்சல் வழியாக இலவசமாக நாளேட்டினைப் படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ‘நீங்கள் படித்தவை எனக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி மிகவும் பயனுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது.  புத்தகங்களைப் படிக்கும் வசதியும் குறிப்பிட்ட சில நாளேட்டினில் அமைக்கப்பட்டுள்ளன. தினமலரில் கணினி தொடர்பான இலவச வெளியீட்டினைத் தரவிறக்கம் செய்யும் வசதி முன்னர் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில வருடங்களாக இத்தகைய வசதி அளிக்கப்படாமல் மின்நூலாக மட்டுமே அளிக்கப்பட்டுவருகிறது.

             கல்வி குறிப்பிட்ட செய்திகளைத் தினமலரும், தினமணியும் அளிப்பதால் இணைய உலகில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன. வளர்ந்து கொண்டிருக்கும் தி இந்து நாளிதழ் இலக்கியச் சிறப்பாதாரங்களுடன் காணப்படுகிறது. குறிப்பிட்ட செய்திகளுக்கு அளிக்கும் உடனடி பதில்களைத் தினமலர் நாளேடு மின்னஞ்சல்வழியாகத் தொடர்புடையவரிடம் தெரிவிக்கிறது. இதைப்போல மக்களின் மனதைப் புரிந்துகொண்டு நாளேடுகள் அமைக்கப்படவேண்டும்.

                 தி இந்து‘ நாளிதழ் அறிவியல் சார்ந்த இலக்கிய அணுகுமுறைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. (http://tamil.thehindu.com/opinion/columns.article6757744-கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள்) முக்கியச் செய்திகளை ஒலி வடிவில் தரவிறக்கம் செய்யும் வசதியுடன்  நாளேட்டின் வடிவமைப்பினைப் புதுமையான கட்டமைப்பு வசதியுடன் அமைத்துள்ளது. சோதிட ஒளிக்காட்சியினை மக்களின் எண்ணங்களுக்கேற்றாற்போல நாளேடுகள் அமைத்துள்ளன. தினகரனில் பக்கவடிவமைப்பில் மருத்துவக்குறிப்புகள் பகுதியும், சமையலறைக்குறிப்புகளும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழ்முரசு பக்கவடிவமைப்பு ஓரளவு மட்டுமே சிறப்புள்ளதாக அமைந்துள்ளது. ஒளிக்காட்சியில் எழுத்துப்பிழையுடன் காட்சியளிப்பதை மாற்றி அமைத்திடவேண்டும். பிறமொழிக்கலப்பு மிகுதியாக அமைந்து கொச்சைத் தமிழ்ச்சொற்கள் அமைந்துள்ளதை மாற்றி அமைத்திடல்வேண்டும்.  தினத்தந்தி நாளேடு மணப்பந்தல் என உட்தலைப்பிட்டுச் செய்திகளை வலைப்பக்க வடிவமைப்பாக்கியுள்ளது. வலைப்பக்க வடிவமைப்பில் பிற நாளேடுகள் போலல்லாது தனித்துக் காணப்படுகிறது.

பெண் முன்னேற்றச் சிந்தனை
              பெண்கள் இணைய வசதியினைக்  குறைவான அளவில் பயன்படுத்தி வருகின்றனர். பெண்ணின் கற்பு குறித்த செய்திகள் உலகளாவிய அளவில் வேறுபட்டுள்ளன. பெண்கல்வி முக்கியத்துவத்திற்காகக் கற்பினை விலைபேசும் பெண்ணினமும்  இருப்பதால் பெண்கள் இன்றளவில்  பாலியல் பொருளாக நோக்கப்படுகின்றனர். பெண் சமுதாயம் உலகம் முழுவதும் ஒருங்கிணைந்த சில கருத்துகளைக் கொண்டிருந்தால் பெண்ணினம் வளர்ச்சிபெறும்.  பெண்களுக்கு நடைபெறும் வன்முறைகள்  நாள்தோறும் செய்திகளில் இடம்பெறுகின்றன. அவைகுறித்தே மக்களால் வாசிக்கப்படுகின்றன என்பதனை அறிந்து விழிப்புணர்வு பெறப் பல நாளேடுகள் பெண் பாலியல் கொடுமைகள் குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இது சமுதாயத்தில் நல்ல எண்ணங்களைக் கொணர்தலின் பொருட்டு வெளிக்கொணரப்படுகின்றன. ஆனால், தனிமனிதத்துவத்தின் உணர்வினை வெளிக்கொணர்வது, பெண்ணின் சுதந்திர நிலையைப் படமெடுத்து வெளியிடுவது போன்ற சில  செய்தி நிகழ்வுகளினால் பெண் சமுதாயம் தாழ்வடையும்.
        பெண் என்பவள் ஒரு உயிரினை உயிர்ப்பிக்கும் வல்லமை பொருந்தியவள். பெண்கள் பகுதி எனக் குறிப்பிட்டு  சமையல், அழகுக்குறிப்புகள், வீட்டு அலங்காரம் போன்றவை மட்டுமே பெரும்பான்மையான நாளேடுகளில் இடம்பெறுகின்றன. உலகெங்கிலும் பெண் குறித்த கருத்துகள் மாறுபடவேண்டும். பத்திரிகையாளர்கள் பெண் குறித்த இதர  பாலியல் வருணனைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காது பெண்ணின் முன்னேற்றக் கருத்துகளுக்கு வழி வகை செய்யவேண்டும். விளம்பரங்களில் பெண்ணின் உடலமைப்பினை ஆபாசமாகக் காட்டும் விளம்பரங்கள் வெளியிடுதலைத் தடை செய்ய வேண்டும். அடித்தட்டு மக்கள் முதல் நாட்டின் முதன்மைப்பீடத்தில் இருக்கும் பெண்களைக்கூட நாளேட்டுச் செய்திகள் விட்டுவைப்பதில்லை. உலகநாட்டு நிகழ்வுகள் நடப்பதை வெளிக்கொணர்வது நாளேடுகளின் கடமை என்றாலும் அடிப்படை மனித உரிமைகளில் இருந்து தவறி விடுகின்றனர். இந்நிலை வருத்தத்திற்குரியது.  இத்தகைய நிலையினை மாற்றியமைக்க நாளேடுகள் ஒத்துழைப்பளிக்க வேண்டும். இதனால் பெண்களும் இணைய வசதியினை அதிக அளவில் பயன்படுத்த முன்வருவர். 
மொழிநடை
                     மொழிநடை என்பது காலமாற்றத்திற்கேற்ப மாறுபடுகிறது. நடைமுறையில் மக்கள் பேசும் மொழிக்கேற்ப இயல்பான நடையில், ஆங்கிலக் கலப்பில் நாளேடுகள் தங்களது மொழிநடையினை மைத்துக்கொள்கின்றன. சீனாவில் மொழிக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்துவத்தை இரா.சுப்பிரமணி வெளிக்கொணர்ந்துள்ளார். (ப.442.,13 ஆவது இணையத்தமிழ் மாநாடு,2014). பிறமொழிச்சொல் கலவாதிருத்தல் நடைமுறையில் கொண்டுவருவது மிகவும் கடினமான செயலாகக் கருதலாம். காரணம், தமிழ் தொடர்பான அறிவியல் கலைச்சொற்கள் தெளிவாக மக்களிடையே பரவவில்லை.
இருப்பினும் ஆங்கிலச்சொல்லை உட்தலைப்பிடாமல் அமைப்பது தமிழ்மொழியின் பெருமையை வெளிக்கொணர்வதாகும். மக்கள் பொது இடங்களில் பிறமொழிச்சொற்கள் கலப்பு  பயன்படுத்துவதைக்   கட்டுப்படுத்த வேண்டும்.
              இணையத்தில் வெளியாகும் நாளேடுகளின்  பங்களிப்பினால்  உலகில் பல இடங்களிலும் வாழும் மக்கள் செய்திகளை அறிந்துகொள்ள இயல்வதையும், அதனால் ஏற்படும் பயன்களையும் இக்கட்டுரை வெளிக்காட்டியுள்ளது. பலதரப்பட்ட முறையில் நாளேடுகள் வடிவமைக்கப்பட்ட முறைமை குறித்தும் இவ்வாய்வுக் கட்டுரையின்வழி அறிய இயலுகிறது.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக